தமிழ்நாடு முதல்வரால் தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் வட்டாரக் கல்வி அலுவலகம் சார்பில் 216 குடியிருப்பு பகுதிகளில் தற்போதுவரை 400 ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் தொடங்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கொடை ரோடு அருகே அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட முகாம் தொடங்கப்பட்டது வட்டாரக் கல்வி அலுவலர் ஆனந்தம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கலைக்குழுவினர் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்தர், தானே சொந்தமாக பாடல் வரிகள் அமைத்து, ‘தமிழ்நாடு முதல்வரின் உள்ளத்தில் உதித்த உன்னதமான திட்டம் இல்லம் தேடி வரும் கல்வி திட்டம்’ என பாடலைப் பாடி அசத்தினார். அதைக் கண்ட பள்ளி மாணவர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்து வரவேற்பளித்தனர். பின்னர் தன்னார்வலர்களுக்குக் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின்போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.