அழுகும் சின்னவெங்காயம்;
கண்டுகொள்ளாத தமிழக அரசு!
கோவை மாவட்டத்தில் சின்னவெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 774 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த காலத்தில் அதிக லாபத்தை தரும் என்பதால், விவசாயிகளின் பணப்பயிராக கருதப்படுகிறது. சிறப்பு திட்ட செயலாக்கம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியான தொண்டாமுத்தூரில் மாதம்பட்டி, நரசீபுரம் போன்ற மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. இங்கு பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்படாததால் பல லட்சம் கிலோ வெங்காயம் அழுகும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டடுள்ளது.
சின்னவெங்காயம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.120 வரை அதிகரித்து உச்சத்தை தொட்டது. தொடர்ந்து, மே மற்றும் ஜூன் மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம், ஆகஸ்ட் மாதத்தில் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட பச்சை சின்னவெங்காயம் விவசாயிகளிடம் இருந்து கிலோ, ரூ.60–70 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இருப்பினும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் விழாக்காலம் என்பதால், விலை மேலும் அதிகரிக்கும் என, விவசாயிகள் கருதினர். மேலும், இந்த காலக்கட்டத்தில் மற்றப்பகுதிகளில் இருந்து வரத்து குறையும் என்பதாலும், பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி நிலத்திலேயே பட்டறைகளை அமைத்து சேமிக்க துவங்கினர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தென்மேற்குப்பருவ மழை காலம் தாழ்த்தி பெய்யத்துவங்கியது. தொடர்ந்து மழை அதிகரித்ததால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால், சீரான காற்று கிடைக்காமல், பட்டறையில் சேமிக்கப்பட்டிருந்த சின்னவெங்காயம் அழுகி வருகிறது. தற்போது, விவசாயிகளிடம் இருந்து தரமான சின்னவெங்காயம் கிலோ, ரூ. 60–75 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இருப்பினும், பட்டறையில் சேமிக்கப்பட்ட, பல டன் வெங்காயம் அழுகி வீணாகியுள்ளது. வீணாகிய சின்னவெங்காயங்கள் நீரோடைகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சின்னவெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், பருவகாற்று குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதாலும் பட்டறையில் உள்ள சின்னவெங்காயம் அழுகி வருகிறது. சீரான காற்று அடித்தால் மூன்று மாதங்கள் ஆனாலும் வெங்காயம் அழுகாது. கடந்த மாதத்தில் வியாபாரிகள் நேரடியாக பட்டறைகளுக்கே வந்து கொள்முதல் செய்தனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலையால், பட்டறையில் சேமிக்கப்பட்ட டன் கணக்கான வெங்காயம் அழுகி, பாதியாக குறைந்து விட்டது. சில விவசாயிகள் ‘பேன்’ அமைத்து பட்டிகளுக்கு காற்று விட்டு வருகின்றனர். ஒரு படலில் ஒரு டன் வெங்காயம் சேமித்ததில், 350 கிலோ வரை அழுகி ‘வேஸ்ட்‘ ஆகிவிட்டது. கடந்த காலங்களில் ஏக்கருக்கு, 8 டன் வரை கிடைக்கும். தற்போது வறட்சியால், ஒரு ஏக்கருக்கு, 3 டன் மட்டுமே கிடைக்கிறது. இதிலும் அழுகி வருவது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அருள்