தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை கோயிலை ஒன்றிய அரசின் யாத்திரை திட்டத்தின் கீழ் உலகறியச் செய்ய வேண்டும் என தர்மபுரி எம்.பி. டாக்கடர் செந்தில் குமார் ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயில். இந்தக் கோயில், கடந்த ஏழாம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாக பல கல்வெட்டுகளும் அதற்கான அடையாளங்களும் உள்ளன. அதேபோல ராஜ ராஜ சோழன் இக்கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்ததற்கான கல்வெட்டுக்களும் உள்ளன.
இத்தனை சிறப்புகளையும் தாண்டி, கோயிலுக்கு மேல் 30 அடி உயரத்தில் இருக்கும் பாறையிலிருந்து இடைவிடாமல் கொட்டும் தண்ணீரை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் பக்தர்களும் பொதுமக்களும் இந்தக் கோயிலுக்கு வருவதுண்டு.
வரலாற்று ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் மக்களைக் கவரும் இந்தக் கோயிலுக்கு உள்ளூர் கைவினைப் பொருட்கள் மற்றும் கலைகளை ஒருங்கிணைத்து சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். எனவே, மிகவும் பழமை வாய்ந்த கோயிலை யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மிக வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து கோயிலின் புகழை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.