கோவை ஆலாந்துறை அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை சைல்டு லைன்,சமூக நலத்துறை மற்றும் காவல் துறையின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.
![child marriage stopped in coimbatore](http://image.nakkheeran.in/cdn/farfuture/fJvfI7oHlng-dNMRGScF5SgJw3ojrVPiPflpXNhlLok/1559622881/sites/default/files/inline-images/childdd.jpg)
குழந்தைத் திருமணம் என்பது இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க நம் நாட்டில் பல்வேறு புரட்சிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த நடைமுறையை தற்போது வரை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. மேலும், இந்த குழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் கல்வி, உரிமை, மனம், உடல் ஆகியவை பாதிக்கப்படுவதால் இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தை திருமணங்களை ஒழிக்க நம் அரசு 1929இல் குழந்தை திருமண தடைச் சட்டத்தை கொண்டு வந்தது.
பின்னர், சில ஆண்டுகளுக்கு பின்பு தெளிவான வயது வரம்பை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணும், 21 வயது பூர்த்தி அடைந்த ஆணும் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வரையறுத்தது. இப்படி குழந்தை திருமணத்தை தடை செய்து அரசு பல்வேறு சட்டங்களை வகுத்தாலும் இன்னும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததை தற்போது வரை நடைபெறும் திருமணங்கள் வெளிப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாதம் 8 முதல் 10 குழந்தை திருமணங்கள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகிறது. இப்படி நடைபெறும் திருமணங்கள் பற்றி தகவல் அறியும்பட்சத்தில், சைல்டு லைன் அலுவலர்களும், சமூகநலத்துறை மற்றும் காவல் துறையும் இணைந்து தடுத்து வருகின்றனர்.
இப்படியிருக்க கோவை மாவட்டத்திலுள்ள ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த திருமணம் தொடர்பாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தகவலறிந்த சைல்ட் லைன் கவுன்சிலர் ஏஞ்சலினா, அதிகாரி சுலேகா தலைமையிலான குழுவை சிறுமியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்களுடன் சமூகநலத்துறை அதிகாரி மற்றும் காவல் துறையினரும் சென்று பெண்ணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் பெற்றோர்களுக்கு குழந்தைத் திருமணம் தவறு என புரிய வைக்கப்பட்டது. இதையடுத்து, திருமணத்தை 18 வயது பூர்த்தி அடையும் வரை நிறுத்திக் கொள்வதாக பெற்றோர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர். இதனால், நாளை நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.