தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22/11/2021) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூபாய் 587.91 கோடி மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூபாய் 89.73 கோடி மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், 25,123 பயனாளிகளுக்கு ரூபாய் 646.61 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்த விழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வி.செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.