தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29/06/2022) திருப்பத்தூரில் ரூபாய் 109.71 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தைத் திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார். அத்துடன், அங்கு நடைபெற்ற அரசு விழாவில், 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர் ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.