
மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்க பெருந்துறை ஒன்றியத்திற்கு தமிழக அரசு ரூபாய் 12 கோடி ஒதுக்கியுள்ளது என பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
இன்று (31-10-2020) பெருந்துறையை அடுத்த வாவிகடை பகுதியில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தினால் வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளை அவர் துவக்கி வைத்துப் பேசும்போது "முன்பெல்லாம் 10 வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஆனால், தற்போது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது.
மேலும், ஒரு தனி நபருக்கு ஒரு நாளைக்கு 45 லிட்டர் தண்ணீர் வழங்குவது என்பதை மாற்றி தற்போது 90 லிட்டர் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக கூடுதல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனது தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதியாக முன்பு இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. மேலும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக, நமது முதல்வர் தலைமையிலான அரசு, கொடிவேரியிலிருந்து பவானி ஆற்று நீரை 247 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை தொகுதி முழுவதும் வழங்கத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.5.40 கோடி மதிப்பில் ஊராட்சிக் கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சியர் இரண்டு பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார். வரும் டிசம்பருக்குள் கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் நிறைவடையும். இதனால், எப்போதுமே தண்ணீர் பஞ்சம் இல்லாத தொகுதியாகப் பெருந்துறை திகழும். ஈரோடு மாவட்டத்தில் மன்னர் காளிங்கராயன் இப்பகுதியில் வாழ்ந்தார். அவர் காலத்தில் காளிங்கராயன் கால்வாய் வெட்டி ஏராளமான நிலங்களுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்தினார். தற்போது, நமது முதலமைச்சர் எடப்பாடியார் அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காகக் கால்வாய்ப் பணிகளைத் துவக்கியுள்ளார்.
இதனால், ஏராளமான குளம் குட்டைகள் பவானி ஆற்று நீரால் நிரப்பப்படும். இந்த வாவிகடை பகுதிக்கும் இதனால் பலன் கிடைக்கும். பெருந்துறை பகுதியின் வறட்சி நீங்கும். இவ்வாறு வேகமாக, வளர்ச்சிப் பணிகளை, இந்த அரசு செயல்படுத்திவருகிறது. வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது என்றதும் நமது முதலமைச்சர் வட மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து ரூபாய் 45 கிலோ என்ற அளவில் விற்க ஏற்பாடு செய்துள்ளார். அந்த அளவிற்கு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.