44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்ற அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்த நிலையில் சென்னையின் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், 'செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. செஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்கிறது தமிழ்நாடு' எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக ரஷ்யாவில் நடைபெற இருந்த இந்த ஒலிம்பியாட் போட்டியை உக்ரைன்-ரஷ்யா போர் சூழல் காரணமாக வேறு இடத்தில் நடத்த ஒலிம்பியாட் அமைப்பு முயன்றது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த முயற்சிகளை மேற்கொண்டது. அதனடிப்படையில் டெல்லி அல்லது சென்னையில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் வரை இந்த போட்டி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை. 2022 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் வென்றதன் மூலம் இந்தியாவில் அதிலும் குறிப்பாகச் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்றுநோக்க வைக்கும்.