சென்னையில் ஐடி ஊழியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை போலியாக தயாரித்து 10 லட்சம் ரூபாய் திருடிய வடமாநில கும்பல் சிக்கியுள்ளது. போலி கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணைக்குப்பின் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பெருங்குடியில் இயங்கி வரும் எஸ்.பி இன்போஸிட்டி எனும் ஐடி வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அங்கு பணிபுரிபவர்கள் பலரின் வங்கி இருப்பு பணம் பீகார், பாட்னா கொல்கத்தா போன்ற இடங்களில் இருந்து திருடப்பட்டது. 20 நாட்களுக்குள் சுமார் பத்து லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது. இதுதொடர்பான புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்பி இன்போஸிட்டி ஐடி வளாகத்தில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்களை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.
ஜூஸ்இட், ஷாபி இ பஞ்சாப் என்கின்ற இந்த இரண்டு கடைகளிலும் வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் அவர்கள் இந்த நூதன மோசடி அரங்கேற்றியுள்ளனர். எவ்வாறு இப்படி பணத்தை திருடினர். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் போன்ற தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,
குறிப்பிட்ட அந்த இரு உணவகத்தில் சாப்பிடக்கூடிய ஊழியர்கள் பணம் செலுத்தும் பொழுது அவர்களுடைய கார்டுகளின் டேட்டாக்களை ஸ்கிம்மர் மூலமாக எடுத்து அதன் மூலமாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை போலியாக தயாரித்து ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்தபோது இந்த தொழில்நுட்ப அறிவு எங்கிருந்து வந்தது. இதுமாதிரி ஏற்கனவே செய்துள்ளார்களா இந்த கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கைதானவர்களில் ஒருவரான ராகுல் சிங்தான் அந்த உணவகத்தின் மாஸ்டர். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட செயல்பட்டவரும் அவர்தான். இந்த உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பீகாரில் உள்ள தனது கிராமத்தை சேர்ந்த 8 பேரையும் ஒவ்வொருவராக சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இந்த இரண்டு கடைகளிலும் வேலைக்கு சேர்ந்தவர்கள் உணவக உரிமையாளருக்கே தெரியாமல் ஸ்கிம்மர் கருவி பயன்படுத்தியுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் தரவுகளை திருடி போலி கார்டுகளை தயாரித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த இரு உணவுகத்திலும் சாப்பிட வரும் ஊழியர்களிடம் பணமாக வாங்காமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி வாடிக்கையாளர்களின் கார்டுகளின் தரவுகளை திருடியுள்ளனர்.
கருவி பொருத்தப்பட்டு தேய்க்கப்படும் கார்டின் விவரங்கள் கணினியில் பதிவாகிவிடும். பின்னர் pos கருவியில் கார்டை ஸ்வைப் செய்யும்போது வாடிக்கையாளர்களின் ரகசிய குறியீட்டு எண்ணை குறித்துக் கொள்வார்கள். கூடுதலாக கையில் அணிந்துள்ள ரகசிய கேமரா மூலமாக ரகசிய எண் வீடியோவாகவும் பதிவு ஆகிவிடும். பின்னர் இப்படிப்பட்ட திருடிய விவரங்களை கொல்கத்தாவில் உள்ள முக்கிய குற்றவாளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இப்படி குறுகியகால இடைவெளியில் பெரும் தொகையை சுருட்டி உள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க தரவுகளை திருடிய 3 நாட்களுக்கு பிறகே போலி கார்டுகள் மூலம் பணத்தை திருடியுள்ளனர்.
எனவே பொதுமக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும்பொழுது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.