கடந்த 2020ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்திருந்தார். அத்துடன், 21 பேருக்கான தண்டனை விவரங்கள் செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேரில் ஒருவர் இறந்த நிலையில், 2 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
காவல் ஆய்வாளர், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி, பாஜக பிரமுகர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக அனைவரும் புழல் சிறையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்சோ தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின் நீதிபதி ராஜலட்சுமி இவர்களுக்கான தண்டனைகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து மீண்டும் புழல் சிறையில் தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்படுவர் என கூறப்படுகிறது.