விபத்தில் சிக்கிய காருக்குள் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய யானைத் தந்தங்களை, அவர்கள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை எழும்பூரில் காசா மேஜர் சாலையில் நடந்த விபத்தின் சி.சி.டி.வி. பதிவான காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, எதிரில் வந்த மற்றொரு கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் உள்பட ஐந்து வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விபத்தை ஏற்படுத்தி கார் ஓட்டுநர், எஸ்.வி.ராதாகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மதுபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியத் தண்டனைச் சட்டம் 308, மரணம் விளைவிக்கும் குற்றத்தைச் செய்ய முயற்சித்தல், மோட்டார் வாகன சட்டப்பிரிவான 189 குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.
வழக்கறிஞர் சி.வி.ராதாகிருஷ்ணன் அதிவேகமாகச் சென்று மோதிய காரை போக்குவரத்து காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, காருக்குள் இருந்த பை ஒன்றில் யானைத் தந்தங்களும், மான் கொம்புகளும் இருந்துள்ளது. இதனைச் சற்றும் எதிர் பாராத போக்குவரத்து காவலர்கள், எழும்பூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனைத்தையும் கைப்பற்றி, அந்த காரை ஓட்டி வந்தவர் மீது விசாரணை நடத்தினர்.
அதில் அவர் பெயர் வில்சன் என்பதும், எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. விபத்தில் படுகாயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்சனிடம், யானைத் தந்தங்கள் குறித்த விசாரணையைத் தொடங்கினர்.
ஆப்பிரிக்காவில் சுற்றுலாத்துறையில் முக்கிய பதவியில் இருக்கும் உறவினர் தனக்குக் கொடுத்ததாகவும், அமெரிக்காவில் அந்த தந்தங்கள், மான் கொம்புகள் வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை அவரே வாங்கி தந்ததாகவும் வில்சன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், வில்சன் கொடுத்த தகவல்களை முழுவதுமாக நம்பிவிடாமல், வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து யானைத் தந்தங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைத்தனர். அதையடுத்து வனத்துறையினர், வண்டலூரில் உள்ள ஆய்வகத்திற்கு யானைத் தந்தங்களை அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.