Skip to main content

சென்னையில் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

 

chennai buses essential works peoples


சென்னையில் அத்தியாவசிய, அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி, இரண்டு வாரக் காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கியத் துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக 200 பேருந்துகள் இன்று (10/05/2021) முதல் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

 

தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சென்னை பெருநகர மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் அரசு விதித்துள்ள நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்