சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிங்க பெருமாள் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் நடராஜர் கோவிலை ஆய்வு மேற்கொண்டபோது கோயிலின் தெற்கு ராஜகோபுரம் அருகில் இடது மற்றும் வலது புறத்தில் இடம் சுத்தப்படுத்தப்பட்டு மதில் சுவரில் மறைப்புகள் கட்டப்பட்டும் இருப்பது தெரிய வருகிறது. மேற்படி சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் என்ன பணிகள் மேற்கொள்ள உள்ளது. என்பது குறித்தும் கட்டுமானங்கள் மேற்கொள்ள தொல்லியல் துறை, நகராட்சி அனுமதி, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெறப்பட்டிருப்பின் அது குறித்த விவரத்தினை அளித்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்படி இக்கோயிலில் புதிய கட்டுமானங்கள் கட்டுவது குறித்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தொடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் பணிகள் மேற்கொள்ள இடமானது சுத்தப்படுத்தப்பட்டு மறைப்புகள் கட்டப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி தொல்லியல் துறை கருத்துரு பெற்று மண்டல மாநிலக் குழுவில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னரே திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எவ்வித அனுமதியும் பெறாமல் பணிகள் மேற்கொண்டால் துறை ரீதியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.