அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. தமிழகத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரம் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், கல்லூரியில் பணியாற்றும் மூத்த பேராசிரியர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்களின் பி.எச்.டி படிப்புக்கான சான்றிதழை ஆய்வு செய்து உண்மை தன்மை சான்றிதழை அனுப்ப வேண்டும்மென கேட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம். சான்றிதழ்கள் ஆய்வுக்கு ஒப்புக்கொள்ளும் பேராசிரியர்கள், சான்றிதழ் ஆய்வுக்கு எனச்சொல்லி கட்டணம் விதித்ததைத்தான் அவர்களால் ஒப்புக்கொள்ள முடியாமல் புலம்புகிறார்கள்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய பேராசிரியர்கள், "நாங்கள் படித்தது எல்லாம் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் தான். எங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டுதுறை தான் வழங்கியது. அந்த சான்றிதழ்களை வைத்துதான் நாங்கள் கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்துள்ளோம். எங்கள் சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ளது. ( பல கல்லூரிகளில் ஒர்ஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ளார்கள்) ஒரு சான்றிதழை உண்மையா என ஆய்வு அவர்களுக்கு 2 நிமிடம் போதுமானது. ஆனால் தான் வழங்கிய சான்றிதழை தானே சரிப்பார்த்து உண்மை தன்மை குறித்து சான்றிதழ் வழங்க 750 ரூபாய் கட்டணம் கட்டச்சொல்கிறது அண்ணா பல்கலைக்கழகம்.
இது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. முதலில் பொறியியல் மாணவர்களிடம் கொள்ளையடிக்க தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தன் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடமும் சுரண்ட தொடங்கியுள்ளது" என கொதிக்கிறார்கள்.