ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்பொழுது மொத்தம் 77 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. கருங்கல்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பானது நடைபெற்றது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை சார்பில் 180 வீரர்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கலந்துகொண்டனர். கருங்கல்பாளையத்தில் தொடங்கி ராஜாஜி நகர், திருநகர், கிருஷ்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பெரிய அக்ரஹாரம் வரை 6 கிலோமீட்டருக்கு பொதுமக்கள் பார்க்கும் விதமாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.