Skip to main content

ஜெயலலிதா கார் ஓட்டுநர் இறந்தது எப்படி? - சம்பவ இடத்தில் சிபிசிஐடி திடீர் விசாரணை!

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

CBCid police investigating case  Jayalalitha  car driver

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், மர்மமான  முறையில் இறந்த இடத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.   

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் எஸ்டேட் உள்ளது. அங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்.24ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி காவல்நிலைய காவல்துறையினர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சயான்,  வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, குட்டி என்கிற பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். பிடிபட்ட நபர்கள் பலரும், கொள்ளை சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கனகராஜின்  பெயரைச் சொன்னார்கள்.     

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இருந்த காலகட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது. சந்தேகிக்கப்பட்ட கனகராஜின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சமுத்திரம் என்பதோடு, அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அதனால் கொடநாடு எஸ்டேட் கொலை,  கொள்ளை சம்பவம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறியது. இதற்கிடையே கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடந்த 2017ம் ஆண்டு ஏப். 28ம் தேதி இரவு சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்தா? அல்லது விபத்தை ஏற்படுத்தி அவர் கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகத்தை  ஏற்படுத்தியது. இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

 

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம், கனகராஜ் மர்ம மரணம் ஆகிய வழக்குகளை மறு  விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.  மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரின் மேற்பார்வையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது.  இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 10 பேரைத் தவிர, வாகன விபத்தில் கனகராஜின் சகோதரர் தனபால், அவருடைய சித்தி மகன் ரமேஷ், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடந்தது. இந்நிலையில் கொடநாடு வழக்கு விசாரணை சிபிசிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்திய 316 பேரிடம்  இருந்து பெற்ற வாக்குமூலம் மற்றும் 3600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

இந்த பரபரப்பான கட்டத்தில், சிபிசிஐடி காவல்துறையினர் 2 வாகனங்களில், சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு ஜன.11ம் தேதி வந்தனர். கனகராஜ்  மர்மமான முறையில் இறந்த இடமான ஆத்தூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சந்தனகிரி பிரிவு சாலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சம்பவத்தன்று கனகராஜ், ஆத்தூர் புறவழிச்சாலையில் எங்கிருந்து எந்த திசையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார்? அப்போது அவர் மது போதையில் இருந்தாரா? ஆத்தூர் நகராட்சி 2வது கோட்டத்தில் உள்ள ரமேஷின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாரா? சம்பவத்தை நேரில் பார்த்தது யார்? விபத்தில் இறந்தாரா? அல்லது யாராவது விபத்தை ஏற்படுத்தி கொல்லப்பட்டாரா?  எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சாலையோரக் கடைக்காரர்கள், குடியிருப்புவாசிகளிடமும் விசாரணை நடத்தினர்.

 

கனகராஜ் இறந்தது தொடர்பாக அப்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆத்தூர் காவல்நிலைய காவல்துறையினரிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுச் சென்றனர். சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கனகராஜ் மர்ம மரண வழக்கு அரசியல் களத்தில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.  


 

சார்ந்த செய்திகள்