மே 7 அன்று மாலை காவிரி உரிமை மீட்பு குழு சார்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உரிமையை வலியுறுத்தியும், மத்திய அரசு தன் ஜல்சக்தி துறையின் கீழ் அதை கொண்டு வருவதை எதிர்த்தும், பதாகை ஏந்தி வீட்டு வாசலில் 10 நிமிடங்கள் நிற்பது என்றும் அதை சமூக இணையங்களில் பதிவிட்டு பரப்புரை செய்வது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சீமான், தனியரசு, வேல்முருகன், கருணாஸ், இயக்குனர் கெளதமன், இயக்குனர் களஞ்சியம், சுப.உதயகுமார், பேரா.ஜெயராமன், காவிரி தனபாலன் உள்ளிட்டோரும், பல விவசாய அமைப்புகளும், மஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இப்போராட்ட ஆயத்தம் குறித்து மஜகவின் டெல்டா மாவட்ட செயலாளர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இன்று உரையாற்றினார்.
அவர்களிடம் பேசிய அவர், காவிரி நமக்கு அரசியல் அல்ல, வாழ்வாதாரம் என்றும் காவிரி நீர் நமக்கு விவசாயம், குடிநீர் என பல வகை பயன்பாடு கொண்டது என்பதால் அது நம் வாழ்வாதாரம் என்றும் கூறினார்.
சென்னை முதல் ராமநாதபுரம் வரை குடிநீர் விநியோகத்திற்கும் காவிரி நீரே பயன்படுகிறது என்றும், 20 மாவட்டங்கள் வரை பல வகையிலும் காவிரி நீர் பயன்படுவதால், இது தமிழக மக்களின் பிரச்சனை என்றும் கூறினார்.
எனவே காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தும் இப்போராட்டத்தில் மஜக முழு வீச்சில் ஈடுபடும் என்றும், நாளைய போராட்டத்தில் திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மஜகவினர் வீட்டு வாசலில் நின்றவாறு மத்திய அரசுக்கு எதிராக பதாகை ஏந்தி நிற்பார்கள் என்றும் கூறினார்.
இதற்காக விவசாய அமைப்புகள் யார் போராட்டம் நடத்தினாலும் மஜக அவர்களுடன் களம் காணும் என்றும் கூறினார்.
டெல்டா பகுதியில் உள்ள மாநில துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் அவர்கள் இப்போராட்ட குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.