மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் ஹல்தர் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று (25/06/2021) காலை 11.00 மணிக்கு கூடியது. காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள், மேகதாது அணை விவகாரத்தை எழுப்பினர். மேலும், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய அரசிடம் எப்படி கர்நாடகா அனுமதி பெற முடியும்? அணைகட்ட அனுமதி பெறுவோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியது குழப்பம் ஏற்படுத்தக் கூடியது. மேகதாது மட்டுமின்றி காவிரியில் எங்கு அணை கட்டினாலும் எங்களது அனுமதி தேவை” என்று ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஜூன் - ஜூலை மாதங்களுக்கான 33.19 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு வழங்க காவிரி மேலாண்மை நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.