வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த ஜார்தான்கொள்ளை மலைகிராம ஊராட்சிக்கு உட்பட்ட எழந்தமரத்தூர் கிராமத்தில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் வீட்டை தேடி வந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்டு வீட்டின் உரிமையாளர். பின்வாசல் வழியாக தப்பி சென்று தலைமறைவாகி விட்டார்.
இதனையடுத்து வீட்டில் 4 தண்ணீர் பேரல்களில் இருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊரல், அடுப்பு உள்ளிட்ட மூலப் பொருட்களை வெளியே எடுத்து வந்து அழித்தனர். பின்பு விற்பனைக்காக 12 லாரி ட்யூப்களில் மற்றும் தண்ணீர் பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் கீழே கொட்டி அழித்தனர். இது குறித்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னபையன் (வயது 40) என்பது தெரியவந்தது.இவர் பல நாட்களாக வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த குற்றத்திற்காக வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி தலை மறைவாக உள்ள சின்னபையனை தேடி வருகின்றனர்.