கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது இறையூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர், பெஞ்சமின் ஜோசப். இவர், கும்பகோணம் முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் இறையூர் பகுதியில் உள்ளது. கும்பகோணத்தில் நீதிபதியாகப் பணியில் இருப்பதால், தனக்குச் சொந்தமான நிலத்தைக் கவனிக்க முடியாமலும், பராமரிக்க முடியாமலும் இருந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அவரது அனுமதி பெறாமல் அவரது நிலத்தில் மின்கம்பம் நட்டு அத்துமீறி பிரவேசித்துள்ளனர்.
இந்தத் தகவலை அறிந்த நீதிபதி பெஞ்சமின் ஜோசப், இது சம்பந்தமாக அவர்களிடம் விபரம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள், நீதிபதியை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக, நீதிபதி பெஞ்சமின் சோசப், எலவாசனூர் கோட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், இறையூர் பகுதியைச் சேர்ந்த ஹீமோன், அவரது மனைவி மேரி, மற்றும் சகாயராஜ், ஷபினா, மார்ட்டின், பாஸ்கல்ராஜ், தேவசகாயம், ஆசீர்வாதம் உள்ளிட்ட பத்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மார்ட்டின், சகாயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். நீதிபதியை மிரட்டிய சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.