திமுக தலைமையிலான அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் நேற்று (17.12.2021) அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதேபோல், கடந்த தேர்தலில் மக்களுக்குத் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் தேனி மாவட்டம் பங்களா மேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அதேபோல் நாமக்கல்லில், அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட அதிமுகவினர் 3000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 1,800 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.