தமிழகத்தில் சீமைக்கருவேலை மரங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்ற நிபுணர் குழுவின் அறிக்கையை, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமைக்கருவேலை மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மரங்களை வெட்ட உத்தரவிட்டது. இந்நிலையில், சீமைக்கருவேலை மரங்களை அகற்றுவதால் ஏற்படும் சூற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சீமைக்கருவேலை மரங்களை அகற்ற தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேலை மரங்களை அகற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையிலான நிபுணர் குழு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த அறிக்கையில், சீமைக்கருவேலை மரங்களால் நிலத்தடி நீருக்கும், நீர் பிடிப்பு பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள போதிலும் அறிக்கையின் இறுதியில் கருவேலை மரங்களால் எதிர்மறை பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளதைச் சுட்டிகாட்டி மனுதாரர் தரப்பில் அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, சீமைக்கருவேலை மரங்களால் மற்ற மரங்களுக்கும், விலங்குகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் அறிக்கை அளித்துள்ளதாகக் கூறினார். மேலும், தென் மாவட்டங்களில் இந்த மரங்களால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை, சுற்றுச்சூழல் ஆய்வுகளில் புகழ் பெற்ற தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சீமைக்கருவேலை மரத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தனது அறிக்கையையும், மனுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகளையும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து நீரி அமைப்பு அளிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.