Skip to main content

வாயுக்கசிவு எதிரொலி; பசுமை தீர்ப்பாயம் விசாரணை

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Gas leak in ennore and Green Tribunal Inquiry

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் தொழிற்சாலையை தற்காலிமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளிட்டுள்ள அறிவிப்பில், ‘எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிமாக மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை புத்தாண்டை அடுத்து விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்