திமுக அரசின் மீது அவதூறு பரப்பியதாக மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தமிழக காவல்துறை அதனை மறுத்துள்ளது.
அண்மையில் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி நான் ஓசியில் பயணம் செய்யமாட்டேன் டிக்கெட் கொடு என நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்களுக்கு இலவசம் என தொடர்ந்து நடத்துநர் கூறியும் வேண்டாம் டிக்கெட் கொடு என வற்புறுத்தி டிக்கெட் வாங்கிக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் கோவையில் நிகழ்ந்தது பின்னர் தெரியவந்தது.
கோவை குரும்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள் இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி துளசியம்மாள், வீடியோ எடுத்து வெளியிட்ட பிருத்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பிருத்விராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் அதிமுக ஐடி விங்கினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக டிவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, மற்ற மூவர் மீதுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.