கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த ஓபிஎஸ் தரப்பு, பின்னர் இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி அமர்விலிருந்து மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின், நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு, இந்த வழக்கைக் கிருஷ்ணன் ராமசாமி முன்பே நடத்த விரும்புவதாக தெரிவித்தது.
இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதியே முடிவு செய்யட்டும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் வர இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்பொழுது இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. விதிப்படி பொதுக்குழு நடந்ததா? இல்லையா? என்ற வாதங்களை முன்வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து பொதுச்செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை திருத்தம் செய்ய இயலாது என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை வைத்து வருகிறது.