ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கஞ்சா கடத்திய வரப்படுவதாக வந்த ரகசியத் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லையோரம் உள்ள வேலூர் மாவட்டம் சைணகுண்டா சோதனை சாவடி அருகே குடியாத்தம் தாலுகா போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. கஞ்சாவைக் கடத்தி வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குடியரசன் (24) கோகுல்குமார் ( 26) மாதேஷ் (21) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்( 23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட குடியரசன் மற்றும் கோகுல்குமார் ஆகிய இருவரும் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக டாடா நகர் பகுதியில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தப்படுவதாக வேலூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரக்கோணம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துறையினருடன் இணைந்து ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
முன்பக்க சாதாரண பெட்டியில் சந்தேகம் அளிக்கக் கூடிய வகையிலிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 பாண்டல்களில் இருந்த சுமார் 14 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுப்ரமணியம் (21) மற்றும் அப்துல் (18) ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வனப்பகுதிகளில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளுக்குள் நுழைந்து மாநில இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கி வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறை பெரும் முயற்சிகள் எடுத்தாலும் கஞ்சா கடத்தி வருவதற்காக அனுப்பப்படும் குருவிகளுக்குத் தரப்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் அவர்களை இந்த தொழிலைக் கச்சிதமாகச் செய்யவைக்கிறது.