
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் அவர்களின் உத்தரவின்பேரில், கல்வராயன் மலைப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு சாராயம், சாராய ஊறல் ஆகியவற்றை அழித்தும், சாராயம் காய்ச்சுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர். அந்த வகையில் சங்கராபுரம் வட்ட ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், மது விலக்கு காவல் ஆய்வாளர் பிரபாவதி ஆகியோர் தனிப்படை அமைத்து கல்வராயன் மலை தாலுக்கா மூலக்காடு கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கண்ணன் மகன் கலியமூர்த்தி (வயது 50) அவரது விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிக்கு இடையில் 37 கஞ்சா செடிகளைப் பயிரிட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் கஞ்சா செடியினைப் பறிமுதல் செய்து கலியமூர்த்தியை கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும், கல்வராயன் மலையில் கள்ளத்துப்பாக்கி தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு விற்பது அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. காவல்துறையும் அவ்வப்போது கள்ளத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து, அதைத் தயாரிப்பவர்கள் மீது வழக்கு போட்டு கைதும் செய்துவருகிறது. அதேபோன்று கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் ஊறல் போட்டு, சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறையும் அவ்வப்போது கல்வராயன் மலைக்கு ரெய்டு சென்று கள்ளச்சாராய ஊறல்களை அழிப்பதும் காய்ச்சுபவர்களைக் கைது செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் மேற்படி குற்றச்செயல்களுக்கு முடிவு மட்டும் இதுவரை ஏற்படவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.