
நாளை மறுநாள் (சனிக்கிழமையும்) மனுத்தாக்கல் செய்யலாம் என தமிழக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். அதன்படி, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் பிப்.22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனவரி 28ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. பிப்.4 தேதி மனுத்தாக்கல் முடிவு பெறுகிறது. பிப்.5 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப்பெற பிப்ரவரி 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல், மனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை சிசிடிவி மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தால் மாவட்ட அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.
நாளை முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை விடப்பட்டதால் அந்தநாளை ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாளில் (சனிக்கிழமை-ஜன.29 ஆம் தேதி) வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.