தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது.
கடந்த சில தினங்கள் முன் 26ம் தேதி திங்கள் கிழமை காலை 09.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, நாசர், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம், தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து, அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
புதிய முதலீடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.