தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக ஆளுநரை இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு துரைமுருகன் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் ஆளுநரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சில இலாக்காக்கள் மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று நடைபெற்ற தொழில்துறை சம்பந்தமான நிகழ்வு ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 23ஆம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்பாகவே பதவி ஏற்பு மற்றும் இலாக்காக்கள் மாற்றியமைக்கும் விழா இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படும் நிலையில் மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.