நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. சமீபத்தில் மாநாட்டிற்கான பந்த கால் பூஜை விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார்.
இதனிடையே வடக்கு மண்டல ஐஜி திஷா மித்தல், மாநாடு நடக்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து காவல் துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஐஜி திஷா மித்தல் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நடக்கும் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆனந்தும் கலந்து கொண்டுள்ளார். அவரிடம் மாநாடு பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காவல் துறை விதித்த 33 நிபந்தனைகளில் சிலவற்றை தளர்வு படுத்த ஆனந்த் கேட்டுள்ளார். அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.