புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வன்னியன் விடுதி கிராமத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து சுமார் 600 காளைகள் பங்கேற்றன. அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை காளை உரிமையாளர்கள் மீண்டும் வாகனங்களில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்றனர். விராலிமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் 3 காளைகளை ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது வம்பன் - திருவரங்குளம் அருகே செல்லும்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் டாடா ஏஸ்லிருந்து தூக்கி வீசப்பட்டதில் செவலூர் முனியப்பன் மகன் மதியழகன் (25), பூலாங்குளம் சின்னப்பன் மகன் விக்கி (30) ஆகிய இருவரும், 2 காளைகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் டாடா ஏஸ் வாகனத்தில் வந்தவர்கள், பேருந்தில் பயணம் செய்தவர்கள் என 7 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒரு காளையும் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கி, பலத்த ரத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியாக வந்த கார்கள் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.