Skip to main content

புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம்..! நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள்..!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

Bribe for new ration card ..! Ministers who took action ..!

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் குஜிலியம்பாறை எனும் ஊர் உள்ளது. இந்த குஜிலியம்பாறையின் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராக சரவணன் என்பவர் பணிபுரிகிறார்.

 

இப்பகுதி மக்கள் பலர் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்த புதிய ரேஷன் கார்டுகளை வாங்கவரும் அப்பகுதி மக்களிடம், ஒரு ரேஷன் கார்டுக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி வாங்கிவந்துள்ளார் சரவணன். இந்த விஷயம் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலருக்குத் தெரியவே, நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அந்த வட்ட வழங்கல் அதிகாரியான சரவணனிடம் “எதற்காக புதிய ரேஷன் கார்டுக்கு 500 ரூபாய் வீதம் மக்களிடம் வாங்குகிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார். 

 

அதற்கு சரவணன், “அலுவலக செலவுக்காக வாங்குகிறோம்” என்று கூறியுள்ளார். “அப்படியானால் அதற்கு ரசீது கொடுங்கள். உங்களை யாரு வாங்கச் சொன்னார்கள்?” என்று சமூக ஆர்வலர் கேக்கவே பதில் சொல்ல முடியாமல் அந்த வட்ட வழங்கல் அதிகாரி சரவணன் திணறினார். இந்த விஷயம் எல்லாம் சமூக ஆர்வலர் பேசிக்கொண்டிருக்கும்போது வீடியோவாக பதிவானது. அந்த வீடியோ சிறிது நேரத்திலேயே வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்த விஷயம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சரான சக்கரபாணி ஆகியோரின் காதுகளுக்கு எட்டவே, உடனடியாக அந்த அதிகாரியின் மேல் துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு உத்தரவிட்டனர். அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, வட்ட வழங்கல் அதிகாரியான சரவணனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்