வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே சேலத்திற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாள் முழுக்க சீரான இடைவெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.
தமிழகத்திற்கு போதிய நிலத்தடி நீர்த்தேவைக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையே கைகொடுத்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழையும் நிகழாண்டில் தமிழகத்திற்கு ஓரளவு கைகொடுத்திருக்கிறது. இந்நிலையில், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக். 20ம் தேதிவாக்கில் தொடங்கும்.
நிகழாண்டில் அக். 17ம் தேதியே வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரித்து இருந்தது. ஆனாலும், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது அக். 16ம் தேதியே (புதன்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழக கடலோரத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகம், புதுவையில் அடுத்த இரு நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சேலத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழை சிறப்பான தொடக்கத்தைத் தந்திருக்கிறது. புதன்கிழமை காலை முதலே சேலம் மாநகர பகுதிகள் மற்றும் உள்மாவட்டத்திலும் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாநகரைப் பொருத்தவரை சீரான இடைவெளியில் மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருந்தது.
சேலத்தில் சூரமங்கலம், நான்கு சாலை, அழகாபுரம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் மழை சீரான இடைவெளியில் பெய்தது.
நள்ளிரவு 12.45 மணியளவில் ஓரளவு கனமழை பெய்யத்தொடங்கியது. 45 நிமிடங்கள் வரை மழை நீடித்தது. பின்னர் லேசான தூறலாக பெய்து கொண்டிருந்தது. பருவமழைக்காலம் என்பதால் மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மழையால் சேலத்தில் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.