திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழக அரசின் அறநிலையத் துறைச் சார்பில் 'அனைத்துலக முருகன் மாநாடு' இரண்டு நாட்கள் நடைபெற்றது. கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மாநாடு நடைபெற்றாலும் மாநாட்டின் அரங்கு மற்றும் கண்காட்சிகளை பொதுமக்கள் ஒரு வார காலம் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
நடைபெற்ற பழனி முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் கல்வி சார்ந்த விஷயங்கள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கியமாக ஐந்தாவது தீர்மானமாக முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழா காலங்களில் முருகன் கோவில்களில் மாணவ மாணவிகளை கொண்டு கந்த சஷ்டி பாராயணம் செய்ய இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முருகப்பெருமானுடைய பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீக பாடப்பிரிவுகள் ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்வியைக் காவிமயமாக்கும், சமய சார்புடையதாக்கும் பாஜக அரசின் இந்துத்துவா செயல் திட்டத்தை முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சி இது என்ற குற்றச்சாட்டை விசிக எம்பி ரவிக்குமார் வைத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அவர்களது துறை சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை யாரும் விமர்சிக்க போவதில்லை. ஆனால் கல்வித்துறைக்குள் சமயத்தை கொண்டு வந்து திணிப்பது, சமய சார்பின்மை எனும் அரசியல் அமைப்பு சட்ட நெறிக்கு எதிரானது. இது கண்டனத்துக்குரியது என தெரிவியுள்ளார்.