தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, " கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூபாய் 12,647 கோடியாக கடன் உயர்ந்துள்ளது. மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டியது உள்ளது. மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழக மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டியது உள்ளது. இதன் காரணமாக மின் கட்டணம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தில் மாற்றம் இல்லை. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். நுகர்வோர் 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 27.50 கூடுதலாகக் கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 301- 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு ரூபாய் 147.50 உயர்த்தப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் 298.50 கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த கட்டண உயர்வு தொடர்பாக அதிமுக போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக பாஜகவும் வரும் 23ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதிமுக வரும் 25ம் தேதி போராட்டம் அறிவித்திருந்த நிலையில் ஒருநாளுக்கு முன்பாக பாஜக போராட்டம் நடத்த உள்ளது.