தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பக்கம் உள்ள தெற்குக் கோட்டூரைச் சேர்ந்தவர் ராமையாதாஸ் (50). அண்மையில் தான் தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர். அக்கட்சியின் அமைப்புச் சாரா பிரிவின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர். தென் திருப்பேரையைச் சேர்ந்த மாரியின் மகன் இசக்கியின் ஆடுகள், கடந்த வாரம் ராமையாதாசின் உளுந்து பயிரிட்ட வயலில் மேய்ந்துள்ளன. இதனால், ஆத்திரமான ராமையாதாஸ் இதனைக் கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது முன் விரோதமாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று ராமையாதாஸ் தென்திருப்பேரையிலுள்ள டீ கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த இசக்கி, தான் வைத்திருந்த அரிவாளால் ராமையாதாசை வெட்டியிருக்கிறார். நிலைகுலைந்த ராமையாதாஸ், தப்பி ஓடுகையில் அவரைத் துரத்திச் சென்ற இசக்கி, அவரை மறித்து தலை, கழுத்து போன்ற இடங்களில் சரமாரியாக வெட்ட, ரத்த வெள்ளத்தில் கதறிய ராமையாதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். வெட்டிய இசக்கி, தன் பைக்கைப் போட்டுவிட்டுத் தப்பியோடினார். சம்பவம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் நகரத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
தகவலறிந்த சரக டிஐ.ஜி பிரவீன்குமார் அபிநவ், எஸ்.பி.ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியதுடன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலையால் ஆத்திரமானவர்கள் எதிர் தரப்பினருக்குச் சொந்தமான இரண்டு பைக்குகள், வைக்கோல் படப்பையும் தீ வைத்துக் கொளுத்தியதோடு அந்தப் பகுதியிலுள்ள வீடுகளைத் கல் வீசித் தாக்கியதால் பதற்றம் அதிகரித்தது. கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அவர்களிடம் எஸ்.பி.ஜெயக்குமார், ஆர்.டி.ஓ தனப்பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்படாமல் மறியல் தொடர்ந்து நீடிக்க, அதன் பின், "கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலை தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதிகாரிகளால் ஏற்கப்பட்ட பிறகே, போராட்டத்தைக் கைவிட்டனர். பிரேதப் பரிசேரதனை செய்யப்பட்ட ராமையாதாசின் உடலைப் பெற்று இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அரசியல் கட்சியின் பொறுப்பாளர் படு கொலையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பிற்காகப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.