தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆகியோருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் கடிதத்தை அ.தி.மு.க.வின் தலைவர்களிடம் வழங்கினர்.
பின்னர், அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கலந்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க., இரண்டாவது நாளாக இன்று (29/01/2022) ஆலோசனை நடத்தியிருந்தது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதில், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க பகுதிகளில் அதிகளவில் போட்டியிட பா.ஜ.க. நிர்வாகிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு இன்று (29/01/2022) மதியம் 12.30 மணிக்கு வந்தனர்.
அங்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் பா.ஜ.க.வின் குழுவினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
இதில், கோவை, நாகர்கோவில், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் அதிக இடங்களை பா.ஜ.க. கேட்டு வருவதாகவும், மொத்த இடங்களில் சுமார் 10%- 12% வரையே பா.ஜ.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்திருப்பதாக தகவல் கூறுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் 80%- க்கும் மேலான இடங்களில் போட்டியிட அ.தி.மு.க. விரும்புவதாகக் கூறப்படுகிறது.