தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடர்ந்து ஒவ்வொரு ஊர்களிலும் தடையை மீறி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்காக பாஜக தமிழக தலைவர் முருகனும், நிர்வாகிகளும் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரை கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று அடைந்தது.
அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த வேல் யாத்திரையில் கலந்து கொண்டனர். யாத்திரையாக கொண்டு வந்த வேலை கோவிலின் கருவறையில் வைத்து பூஜை செய்ய பாஜகவினர் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த நிலையில், கோரிக்கை மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் பாஜகவினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சிவானந்தா காலனியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில், வேல் யாத்திரைக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், இந்த வெற்றிவேல் யாத்திரை அவசியமா என்று கேட்டார்கள். இது அவசியம் அல்ல அத்தியாவசியமான ஒன்று. இந்த யாத்திரை தொடங்கியதிலிருந்து இன்றுவரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஸ்டாலின் அவர்களுக்கும், அந்த கூட்டணியை சார்ந்தவர்களுக்கும் தூக்கம் தொலைந்து போய்விட்டது எனவும் விமர்சித்தார்.