கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று ஸ்தாபக தின விழா நடந்தது. இதில் ஆரல்வாய்மொழியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சார அணித் தலைவா் ஜெயிரகாஷ், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார். அவரின் பேச்சு பா.ஜ.க.வினர் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த பேச்சைக் கேட்ட அந்த பகுதி தி.மு.க.வினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் தி.மு.க.வினர் எதிர்த்து குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தி.மு.க. மாவட்டப் பொருளாளா் கேட்சன் முதலமைச்சரை அவதூறும் அருவருப்பாகவும் பேசிய ஜெயபிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆரல்வாய்மொழி காவல்துறையினர் புகார் கொடுத்தார்.
பின்னர் ஜெயபிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரணியலில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டிற்கு ஏப்ரல் 7- ஆம் தேதி அன்று நள்ளிரவு நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமாா் தலைமையில் சென்ற காவல்துறையினர், அவரை வெளியே வரும் படி கூப்பிட்டும் அவர் கதவை திறக்காமல் உள்ளே இருந்தார்.
அதன்பிறகு கொஞ்ச நேரத்தில் பா.ஜ.க. வழக்கறிஞர்கள் பத்மகுமார், வேலுதாஸ் பா.ஜ.வினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து பா.ஜ.க.வினரை காவல்துறையினர் எச்சாித்தனர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜெயபிரகாஷை காவல்துறையினர் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனா்.