கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர்களாக ஐந்து பேர் களத்தில் இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமியும், மு.க. ஸ்டாலினும்தான் அமோக வெற்றி பெற்றனர். திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுகவுடன் கூட்டணியில் போட்டியிட்ட பாஜக தமிழகத்தில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பாஜக தோற்கவில்லை எனவும், பூஜ்ஜியத்தில் இருந்து நான்காக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழகத்தில் பாஜக தோற்கவில்லை. 4 எம்எல்ஏக்கள் சட்டசபைக்குப் போயிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மூன்று இடங்களில் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். தமிழக மக்கள் எங்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்'' என்றார்.