பிஜேபியின் நெருக்கடியில் தேமுதிகவிற்கு திருச்சி எம்.பி. தொகுதி ஒதுக்கியதாக தெரிகிறது. திருச்சியில் தேமுதிகவை பொறுத்தவரையில் ஏற்கனவே தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.ஜி விஜயகுமார் என்பவருக்குத் தான் சீட்டு கிடைக்கும் அல்லது பிரேமலதா தம்பி சுதிஷ் இங்கு போட்டியிடுவார் என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ஆருடம் சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் திருச்சியில் விஜயகாந்த கட்சி ஆரம்பிப்பதற்கு மிக முக்கியமான ரசிகர்கள் பல பேர் திருச்சியில் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் திருச்சியில் விஜயகாந்த மகன் விஜய் பிரபாகரனை திருச்சியில் போட்டியிட சொல்லுங்கள், திருச்சியில் திருவரம்பூர், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் கனிசமாக விஜயகாந்த ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே திருச்சியில் வைத்து விஜயகாந்த் மகனுக்கு மாநில இளைஞர் அணி மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே சுதிஷ் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்கிற சர்வே எடுத்த அடிப்படையிலே விஜயகாந்த மகன் தற்போது களம் இறக்கலாம் என்கிற யோசனை இருக்கிறது என்கிறார்கள் விஜயகாந்த கட்சியில் உள்ள மேல் மட்ட நிர்வாகிகள். இதற்கு இடையில் சுதிஷ், மற்றும் விஜயபிரபாகரன் திருச்சியில் போட்டியில்லை என்கிற முடிவுக்கு வந்தால் திரும்பவும் திருச்சியில் உள்ள தேமுதிக பிரபலங்கள் பக்கம் திரும்பியது.
திருச்சி மா.செ. டி.வி. கணேஷன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஆனால் என்னிடம் 2 சி இருக்கு மீதி கட்சி தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதே போல் திருச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஏ.எம்.ஜி. விஜயகுமார் நான் தொடர்ந்து தேர்தலில் செலவு செய்து கொண்டே இருக்கேன். என்னிடம் பணம் எதுவும் இல்லை. எனக்கு சீட்டு வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக தலைமை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தனர்.
இந்த நிலையில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் தர்மபுரியை சேர்ந்தவர். இவர் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர். திருச்சி மாநகரில் பிள்ளைமார் சமூகத்தினர் அதிகமாக இருப்பதால் நான் போட்டியிடுகிறேன் என தலைமைக்கு சொல்லியிருக்கிறார். உடனே உற்சாகமடைந்த தலைமை, இளங்கோவனை திருச்சி தேமுதிக வேட்பாளராக அறிவிக்க தயார் ஆகி கொண்டிருக்கிறது.