கரூரில் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று (08.07.2021) பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், கரூரில் ஆட்சியர் பிரபுசங்கர் காரில் செல்லும்போது பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை அடுத்து பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது காரில் சென்ற மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பாஜக பட்டாசு வெடிக்க அனுமதி பெற்றுள்ளதா என கேட்டார். பட்டாசு வெடிக்க அனுமதி பெறாவிடில் பாஜகவினரைக் கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, “திமுக வெற்றிபெற்றபோது அனுமதி பெற்றா பட்டாசு வெடித்தனர்” எனக் கேட்டு போலீசுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.