பள்ளிக்கல்வி செயலர் மாற்றப்படுவார் எனும் வதந்தியே அரசுக்கு மிகப்பெரிய அவமானம்: கல்வியாளர்கள் சங்கம்
தமிழக பள்ளிக்கல்வி செயலாளர் மாற்றப்படுவார் என்னும் வதந்தியே தமிழக அரசிற்கு மிகப்பெரிய அவமானம் என கல்வியாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசுப்பள்ளிகளின் மீது பொதுமக்களுக்கு அபார நம்பிக்கை, தங்களது பணியின் மீது ஆசிரியர்களுக்கு திடீர் உற்சாகம். லஞ்சமில்லாத பணிமாறுதல், நவீனப் பாடத்திட்டம்,இப்படி எல்லாம் சரியாக, சிறப்பாக சென்றுகொண்டிருக்கும் சூழலில் உதயச்சந்திரன் மாற்றபடுவார் என்னும் வதந்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது..
இந்நேரம் ஒரு மறுப்பு அறிக்கை கல்வி அமைச்சரிடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.. தமிழக அரசு இயங்கிக் கொண்டு இருக்கிறது என்னும் உணர்வே பள்ளிக்கல்வித்துறை ஒன்றின் மூலமாக மட்டுமே ஏற்படுகிறது. இதனையும் மீறி அரசாங்கம் தவறான முடிவு ஒன்றை எடுத்தால், தீராத களங்கம் ஒன்றை சுமக்க வேண்டி இருக்கும் இந்த அரசு.
இதுவரை உரிமைகளுக்காக, சலுகைகளுக்காக மட்டுமே போராடிய ஆசிரியர்கள் முதன்முறையாக தன்னம்பிக்கை தரும் நேர்மையான அதிகாரிக்காக போராடினார்கள், வென்றார்கள் என்னும் வரலாறு பேசும். ஊடகங்கள் உண்மைக்கு துணை நிற்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.