காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தொகுதியின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக சென்னையில் துறை சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்துவருகிறார்.
அந்த வகையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்த ஜோதிமணி எம்.பி., கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து கரூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கவும், புகளூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கவும் வலியுறுத்தினேன்.
இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்ததற்கும், கரூர் தொகுதிக்கு உட்பட்ட கரூர் மற்றும் வேடசந்தூர் பகுதிகளை முருங்கை மண்டலமாக அறிவித்தது, உழவர் சந்தைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அவரது மற்றொரு ட்விட்டர் பதிவில், "அமைச்சர் துரைமுருகனைச் சந்தித்து கரூர் தொகுதியில் பஞ்சபட்டி, தாதம்பாளையம், வெள்ளியனை, கண்ணூத்து, மணப்பாறைபட்டி உள்ளிட்ட குளங்கள் மற்றும் ஏரிகளைத் தூர்வாருவது மற்றும் தடுப்பணைகள் கட்டுவது பற்றி கோரிக்கை வைத்தேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் நெரூர் மற்றும் மருதூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைகள் அமைக்கப்படும் என்று அறிவித்த அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.