ஓடும் ரயிலில் பெங்களூரைச் சேர்ந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த கேரளா வாலிபரை சேலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் திப்பசந்திரா, மைத்திரி ஓப்புலன்சி குடியிருப்பைச் சேர்ந்த ரவி மனைவி ஷோபா (55). ரவியின் சொந்த ஊர் கேரளா மாநிலம் வேலையாநாடு ஆகும். அங்கு வசிக்கும் அவருடைய தம்பி ஆண்டனியின் ஆண் குழந்தைக்கு சமீபத்தில் சர்ச்சில் ஞானஸ்தானம் கொடுக்கும் விழா நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக கணவன், மனைவி இருவரும் கேரளா சென்று இருந்தனர். அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக எர்ணாகுளம் - பானஸ்வாடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற ரயில் பெட்டியில் ஒரு வாலிபரும் பயணம் செய்தார்.
பயணிகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து ஷோபாவுக்கு அடிக்கடி அந்த சில்மிஷம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த ரயில் சேலத்தை நெருங்கியபோது இதுகுறித்து கணவரிடம் கூறினார். அவர் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. 15ம் தேதி இரவு 11 மணியில் இருந்து 16ம் தேதி நள்ளிரவு 00.15 மணி வரை ஒன்றேகால் மணி நேரமாக தனக்கு அந்த இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக ஷோபா, போலீசார் விசாரணையின்போது கூறினார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள வாலாகுளத்தைச் சேர்ந்த லக்ஷ்மிந்தர் மாலிக் மகன் சுதர்ஷன் மாலிக் (25) என்பது தெரியவந்தது. பாலியல் தொல்லை கொடுத்ததை அந்த வாலிபரும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சுதர்ஷன் மாலிக் மீது பாலியல் சீண்டல் மற்றும் பெண் கொடுமைக்கு எதிரான சிறப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.