Skip to main content

மனைவியின் ரகசிய செல்போனை கண்டுபிடித்த கணவன் கொலை... விசாரணையில் அதிர்ந்த போலீசார்

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

Banana Leaf Merchant incident his wife police investigation

 

சேலத்தில் வாழை இலை வியாபாரி, நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையம் பின்பகுதியில் வசிப்பவர் பிரபு (வயது 39). காவல் நிலையம் எதிரில் வாழை இலை கடை நடத்திவந்தார். இவருடைய மனைவி ஷாலினி (வயது 24). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்; 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 

 

இவர்களுடைய வீட்டின் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். முதல் தளத்தில் பிரபுவின் அக்காவும், தாயாரும் வசிக்கின்றனர். இரண்டாம் தளத்தில் பிரபு குடும்பமும் உள்ளது. 

 

திங்கள்கிழமை (ஆக. 2) நள்ளிரவுக்கு மேல் திடீரென்று ஷாலினி, 108 ஆம்புலன்சுக்குத் தகவல் அளித்தார். அப்போது தனது கணவருக்கு உடல்நலம் சரியில்லை என்றும், மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தது. அதிலிருந்த துணை மருத்துவ ஊழியர்கள், பிரபுவின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்கள் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்ற மாட்டோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். மேலும், அருகில் உள்ள அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். 

 

இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்று விசாரணை நடத்தினர். பிரபுவின் காது, உள்ளங்கை ஆகிய இடங்களில் சிராய்ப்பு காயங்கள் தென்பட்டன. 

 

ஷாலினியிடம் விசாரித்தபோது, ''நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் இருவர் திடீரென்று வீட்டுக்கு வந்தனர். அவர்கள் எனது தாலியைப் பறிக்க முயன்றபோது படிக்கட்டில் உருண்டு விழுந்துவிட்டேன். இதில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது என் கணவர் மூச்சுப்பேச்சின்றி கிடந்தார். மர்ம நபர்களைக் காணவில்லை,'' எனக் கூறியுள்ளார். 

 

அதேநேரம், ஷாலினியின் தாலிக்கொடி கொள்ளை போகவில்லை. ஆனால் அறுபட்டிருந்தது. வீட்டில் நகைகளோ, பணமோ கொள்ளை போகவில்லை. ஷாலினி கூறுவது உண்மையாக இருக்கும்பட்சத்தில், வீட்டில் நகை, பணம் கொள்ளை போயிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தப் பொருளும் கொள்ளையடிக்கப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

 

பிரபுவின் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது, இலை கடையைப் பூட்டிவிட்டு பிரபு, இரவு எப்போது வீட்டுக்குள் வந்தாலும் கீழ் தளத்தில் உள்ள நுழைவாயில் கதவையும், மாடிக்குச் செல்லும்போது அங்குள்ள படிக்கட்டுகளின் கதவையும் பூட்டிவிட்டுத்தான் செல்வார் என்கிறார்கள். அப்படியிருக்கும்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் எளிதில் நுழைந்துவிட முடியாது என உறவினர்கள் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

 

தினமும் ஷாலினி, செல்ஃபோனில் அதிக நேரம் செலவிடுவார் என்பதும், அதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய செல்ஃபோனை பிரபு பறித்துக்கொண்டார் என்பதும், அப்போதிலிருந்து கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்துவந்தது என்ற கூடுதல் தகவலையும் காவல்துறையினர் திரட்டியுள்ளனர்.

 

விசாரணையின்போது ஷாலினி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் அவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கணவரின் கொலையில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ஷாலினியின் ஃபேஸ்புக் கணக்கை ஆய்வுசெய்தபோது, அவர் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நெருக்கமான நட்பில் இருந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கணவர் தனது செல்ஃபோனை பறித்துக்கொண்ட பிறகும் ஷாலினி, ரகசியமாக ஒரு செல்ஃபோனைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆண் நண்பர், ரகசிய செல்ஃபோன் ஆகியவற்றையும் முடிச்சுப் போட்டு சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே, பிரபுவின் சடலம் உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

 

ஷாலினியின் செல்ஃபோனுக்கு வந்த அழைப்புகள், அதிலிருந்து சென்ற அழைப்புகள் பற்றிய தரவுகளையும் காவல்துறையினர் சேகரித்துவருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம், சம்பவத்தன்று அவருடைய வீட்டுக்கு வந்துசென்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. இச்சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்