வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னு - கோவிந்தன் தம்பதியர். கடந்த 27ஆம் தேதி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சின்னு என்ற பெண்ணுக்கு 27ஆம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதன் பின் குழந்தை நல வார்டுக்கு, சின்னு மற்றும் குழந்தையும் மாற்றி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி சின்னுவிடம் குழந்தையை வாங்கி அழுகை நிறுத்த தாலாட்டு பாடியுள்ளார்.
கொஞ்ச நேரத்தில் அந்த பெண் குழந்தையுடன் காணாமல் போய் உள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் தன் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து அந்த தாய் கத்தி கதறி அழுத்துள்ளார். உடனே இதுபற்றி மருத்துவமனையில் இருக்கும் புறக்காவல் நிலையத்தில் உள்ள காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கூறியுள்ளனர்.
முதல் கட்டமாக வேலூர் கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் சுபா விசாரணை நடத்த வருகை தந்தார். குழந்தை பெற்ற இளம் தாயை வார்டில் இருந்து ஜீப்பில் ஏற்றி வந்து புறக்காவல் நிலையத்தில் அவரையும், அவரது தாயாரையும் தரையில் உட்காரவைத்து நடந்தது என்னவென விசாரணை நடத்தினார். ஒரு மணி நேரமாக அந்த பெண்மணியிடம் விசாரித்துவிட்டு மீண்டும் அவரை கொண்டுபோய் வார்டில் விட்டுவிட்டு வந்துள்ளார்.
“குழந்தை பெற்ற ஒரு இளம் தாயிடம் எப்படி விசாரிக்க வேண்டும் என்று கூட தெரியாமல் தரையில் உட்கார வைத்து விசாரணை நடத்தியுள்ளார். சட்டப்படி புகார்தாரரை நாற்காலியில் அமரவைத்துதான் விசாரணை நடத்த வேண்டும். அப்படிப்பட்ட விதிகளைக் கூட கடைப்பிடிக்காமல் ஒரு பெண் காவல் ஆய்வாளர் நடத்தியது அதிர்ச்சியாக இருந்தது” என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.