கோவையில் கட்டுமான பணி செய்து வரும் பல வெளிமாநிலத்தவர்களுக்கு உண்பதற்கு வழி இல்லை, தங்குவதற்கு வீடு எதுவும் கிடையாது, எங்கு வேலை செய்கிறார்களோ அங்கு கூடாரம் அமைத்து தங்கி விடுவார்கள்.
தற்சமயம் அவர்கள் சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும்போதுதான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலைமையில் சுற்றி இருக்கும் குடும்பங்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் நாட்களை கடக்கின்றனர். இன்று காலை கட்டிட வேலை செய்யும் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்வது என தெரியாமல் அரசு மருத்துவமனைக்கு போக முடிவு செய்து நடந்து வந்துள்ளார்.
அப்போது சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த பழனிசாமி வீட்டருகில் அந்தப் பெண் விழுந்து விட்டார். அதைப் பார்த்த பழனிசாமி, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து உள்ளார். அதற்குள் ஆட்டோ சந்திரன் என்பவர் ஆட்டோ எடுத்துக் கொண்டு உதவிக்கு வந்தார். ஆனால், ஆம்புலன்ஸும் மருத்துவர்களும் வருவதற்குள் குழந்தை தலை வெளியே வந்துவிட, அங்கிருந்த மக்களே பிரசவம் பார்க்க ஆயத்தமாகி விட்டனர்.
ஆட்டோ சந்திரன் குழந்தையை வெளியே எடுத்து தொப்புள் கொடியை அறுத்து ஒரு கை தேர்ந்த மருத்துவரைபோல சேவை செய்தது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு மருத்துவர்கள் வந்து மருத்துமனைக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்றனர். சாலையில் குழந்தை பிறந்த இந்த சம்பவத்தில், ஆண்களே பிரசவம் பார்த்ததைக் கண்டு கோவை மக்கள் மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார்கள்.