தமிழக நீதிமன்ற பணிகளை மே மாதத்தில் தொடங்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராம. சேயோன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், பதிவாளருக்கும் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது,
"தற்பொழுது கரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் நீதிமன்றப்பணிகள் முடக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் சுற்றறிக்கையில், கோடைகால விடுமுறை தள்ளி வைக்கப்படுவதாகவும், மே மாதம் முதல் வாரத்தில் தமிழக நீதிமன்றங்களில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் கரோனா வைரஸ்நோய் தொற்று காற்றைவிட மிக வேகமாக பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் மே மாதத்தில் தமிழகத்தில் நீதிமன்ற பணிகளை தொடங்கினால், பெருமளவில் நீதிமன்றங்களில் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. அவ்வாறு மக்கள் கூட்டம் கூடும்போது யாராவது கரோனா தொற்று உள்ள ஒருவர் நீதிமன்றத்திற்கு வந்தால், அவர் மூலம் பல நூறு பேருக்கு பரவ வாய்ப்பாக அமையும். இது ஒரு சமூக தொற்றாகவும் மாறிவிடும், கரோனா வைரஸ் மூன்றாவது நிலையாக, கொத்து, கொத்தாக பரவுவதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துவிடும். ஆகையினால் மே 31 வரை நீதிமன்ற பணிகளை முடக்கி, அவசர வழக்குகளை மட்டும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்க உரிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்க வேண்டும்," வேண்டுகோள் விடுத்துள்ளார்.